காயங்களும் குருதிப்பெருக்கும்

காயங்களினதும் இரத்தப் பெருக்கினதும் அறிகுறிகளும் அடையாளங்களும் பாரிகாரமும்

பின்னணித் தகவல்

சருமத்தின் மேற்பரப்பில் அல்லது உட்புற இழையத்தில் ஏதேனும் முறிவு ஒரு காயமாகும். காயங்களை திறந்தவை, வெளிப்புறக் குருதிப்பெருக்கு அல்லது மூடியவை, உட்புற குருதிப் பெருக்கு என விவரிக்கலாம்.

திறந்த காயங்கள் - வெளிப்புற குருதிப் பெருக்கு பெரும்பாலான திறந்த காயங்கள் அன்றாடம் இடம்பெறும் வெட்டுக்காயங்களும் உராய்வுகளும் ஆகும். ஒருசில காயங்கள் பாரதூரமானவையாகவும் மோசமான குருதிப்பெருக்கை ஏற்படுத்துபவையுமாகலாம்.

மூடிய காயங்கள் - உட்புற குருதிப் பெருக்கு முதலுதவி பற்றி அறிவுடைய ஒருவர் பொதுவாகக் கையாளக்கூடிய மூடிய காயம் உராய்வாகும். கீழ்ப்புறத்தில் முறிவு போன்ற ஊறு எதுவுமிருந்தால் அல்லது உராய்வானது கீழே உள்ளுறுப்பொன்று இருக்கும் இடத்திற்கு மேலேயூள்ள ஒரு பகுதியில் ஏற்பட்டால் உராய்வூகள் பாரதூரமானவையாக இருக்கலாம்;.

காயமொன்று திறந்திருந்தால் அதிலிருந்து உடல் குருதியையும் ஏனைய உடற் திரவியங்களையும் இழந்துவிடும். கிருமிகள் உட்செல்லலாம். இதனால் தொற்று ஏற்பட ஏதுவாகலாம். எப்போதும் போல் முதலுதவி தெரிந்தவர் முதலில் தமது பாதுகாப்பை கருத்திற்கொள்ளுதல் வேண்டும். குருதியும் ஏனைய உடற்திரவங்களும் மற்றும் ஹெப்படைட்டிஸ் பீ போன்ற வைரசுகளைக் கொண்டிருக்கலாம். முடியுமானால் முதலுதவியை மேற்கொள்ளு முன் நீங்கள் கையுறையொன்றை அணிய வேண்டும். அல்லது உங்கள் கைகளை பிளாஸ்டிக் பையொன்றினுள் வைத்துக்கொள்ள வேண்டும். ஒர் அவசர நிலையில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடியவிடத்தும் உங்களிடம் கையுறைகள் இல்லாதவிடத்தும் இது உங்களை தடைசெய்தலாகாது. உண்மையில் வைரசை தடைசெய்வதற்கு சருமம் மிகச் சிறந்த சாதனமாகும். புண்களை அல்லது திறந்த மேற்பரப்புகளை நீர்த்தடையுள்ள ஒரு கட்டுத்துணியால் மூடிவைத்திருக்கப் பழகிக்கொண்டால் நீங்கள் போதியளவு பாதுகாக்கப்படுவீர்கள். பெரும் அளவிலான குருதி உங்கள் சருமத்தில்பட்டால் அல்லது கண்களிலும் வாயிலும் குருதி தெளிபட்டால் அவசரமாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனையைப் பெறவும்.

குறிக்கோள்

குருதி வீணாவதைக் கட்டுப்படுத்துதல்
அதிர்ச்சிக்கு சிகிச்சையளித்தல்
தொற்றுதலைத் தடுத்தல்
தோதானவிடத்து அருகிலுள்ள சௌக்கிய வசதிக்கு எடுத்துச் செல்ல ஒழுங்கு செய்தல்
ஏற்பவலியையும் விலங்கு விசர்நோயையும் பற்றி பரிசீலித்தல்

சாதாரண குருதிப் பெருக்கு

பரிகாரம்

வெட்டுக்காயம் சிறியதாக இருந்தால் சிறிது நேரத்திற்கு குருதியை ஓடவிடவும். ( இதனால்காயம் தானாகவே சுத்தமடையும்) பின்னர் குருதிப் பெருக்கை நிறுத்துவதற்கு

பத்து நிமிடங்கள் வரை நேரடியான அழுத்தத்தைப் பயன்படுத்தவும். காயத்தை சுற்றியுள்ள பாகம் அழுக்காக இருந்தால் சுத்தமான நீரால் மெதுவாக கழுவித் துடைக்கவும். அடுத்து பிளாஸ்டர் போன்ற கிருமி அகற்றப்பட்ட கட்டுத்துணியால் மூடிவிடவும். ஆனால் பஞ்சி அல்லது லின்ட் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டாம் ஏனெனில் அவற்றிலுள்ள தும்புகள் காயத்தில் ஒட்டிக்கொள்ளும் காயத்தில் கற் துணுக்குகள் குத்திக்கொண்டிருந்தால் மருத்துவ உதவியை நாடவும்

பாரிய குருதிப்பெருக்கு
பரிகாரம்

காயத்தைத் திறந்துவிடவும்
காயத்தில் எதுவும் ( அல்லது எலும்பு) புதைந்திருக்கின்றதா எனப் பார்க்கவும்
அவ்வாறு எதுவும் புதைந்திராவிட்டால் உங்கள் விரல்களால் அல்லது உள்ளங்கையால் நேரடியான அழுத்தம் கொடுக்கவும். சுத்தமான துணித்துண்டு அல்லது கிருமியகற்றப்பட்ட கட்டுத்துணி இருந்தால் அதனைப் பயன்படுத்தவும்.
பின்னர் அவயவத்தை உயர்த்தி வைக்கவும்
பாதிப்புற்றவரை கீழே இருத்தி அவயவத்தை உயர்த்தி வைக்கவும்
அதிர்ச்சிக்கு சிகிச்சை அளிக்கவும்
காயத்தின்மீது பத்து நிமிடம் அழுத்திக்கொண்டிருக்கவும்
குருதிக் கசிவு நின்றதும் ஏதேனும் புதிய துணித்துண்டை வைத்து கிருமி அகற்றப்பட்ட கட்டுத்துணியை வைத்து கட்டவும். ஏனெனில் காயத்துக்கு அப்பாலுள்ள பகுதிக்கு குருதிச்சுற்றோட்டம் தடைப்பட்டுவிடும்.
கட்டுதுணிக்கு மேலாக குருதி வடிந்தால் கட்டுத்துணியை எடுத்துவிடாமல் அதற்கு மேலாக இன்னொரு துணியை வைத்துகட்டவும்.
இரண்டாவது கட்டுத்துணிக்கு மேலாகவும் குருதி கசிந்தால் இரண்டையும் எடுத்துவிட்டு புதிய கட்டுத்துணிகளை வைத்துக் கட்டவும்.

 

பிற பொருட்கள்

காயத்தில் ஏதேனும் பொருள் குத்திக்கொண்டிருந்தால் காயத்திற்கு மருந்துகட்டுவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

குத்திக்கொண்டிருக்கும் பொருளின் மட்டத்திற்கு மேலாக உயரும்வரை மடித்த ஒரு துணித்துண்டை வைக்கவும். ( வளைய மெத்தையொன்றல்ல)

தேவையான உயரத்திற்கு துணித்துண்டை வைக்க முடியாவிடில் அப்பொருளை சுற்றிக் கவனமாக காட்டவும்

அடியிலுள்ள பொருளின்மீது அழுத்தாமல் துணித்துண்டின் இரு முனைகளிலும் இலேசாகக் கட்டவும்

உதவி கேட்டனுப்பவும். சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் அத்துடன் போடப்பட்ட கட்டுக்கு அப்பால் குருதிச் சுற்றோட்டத்தையும் கவனிக்கவும்.கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் காயத்திற்கு அப்பாலுள்ள பகுதி குளிர்மையாகவும் வெளிறிப்போயுமிருக்கும். பாதிப்புற்றவர் குத்துவதாகவும் முறையிடுவார்.

நீங்கள் கண்டறிந்த விடயங்களை மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மருத்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

 

மண்டையோட்டிலிருந்து குருதி வடிதல்

பின்னணித் தகவல்

தலைக் காயங்களிலிருந்து குருதி ஏராளமாக வழிந்தோடும் ஏனெனில் தலைக்கு குருதி தாராளமாகக் கிடைக்கின்றது. அத்துடன் அடியிலுள்ள சருமமும் ஏனைய இழையங்களும் இழுபட்டிருக்கின்றன. இதனால் தலையில் ஏற்படும் காயங்கள் அகன்றிருக்கின்றன. எனவே குருதிக் கசிவும் அதிகரிக்கின்றது. தலையில் ஏற்பட்ட காயம் மண்டையோட்டையும் சேதப்படுத்தும் என்பதை முதலுதவியாளர் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். தலையில் காயமுற்ற அல்லது தலைக் காயத்தால் மூர்ச்சித்த எவரும் கட்டாயமாக மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்கப்படுதல் வேண்டும்.

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடு செய்யவும்.

முடியுமானால் பெயர்ந்துள்ள தோலை உரிய இடத்தில் வைக்கவும்.

உங்கள் கைகளையும் ஒரு சுத்தமான துணித்துண்டையும் அல்லது கிருமியகற்றப்பட்ட கட்டுத்துணியையும் பயன்படுத்தி கீழிருந்துமேல் நோக்கியவாறு வைத்து நேரடி அழுத்தம் கொடுக்கவும்.

உங்கள் விரல்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது கீழுள்ள ஏதேனும் முறிவை அமர்த்தக்கூடும்.

பத்து நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுக்கவும்.

பாதிப்புற்றவர் சுயநினைவுடனிருந்தால் தலையையும் தோள்களையும் சற்று உயர்த்தி வைத்தவாறு அவரைக் கீழே இருத்தவும்.

அவர் மூர்ச்சித்திருந்தால் தேறும் நிலையில் வைக்கவும்.

காயம் பாரதூரமானதாக இருந்தால் அல்லது பாதிப்புற்றவர் மூர்ச்சித்தால் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துசெல்ல ஏற்பாடு செய்யவும்.

நீங்கள் கண்டறிந்த விடயங்களையும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

மூக்கில் குருதி வடிதல்

பின்னணித் தகவல்

மூக்கில் குருதி வடிதல் பொதுவான பிரச்சினையாகும். மிகவும் வழமையான காரணம் உட்புற மேற்பரப்பில் குத்துதல் அல்லது சொறிதல் அலலது நேரடிக் தாக்கம் அல்லது தும்மல் என்பன ஆகும். மூக்கில் குருதி கசிவதற்கு ஒரு சில மருத்துவ நிலைமைகளுமுள்ளன. ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் பரிகாரம் ஒன்றுதான்.

பரிகாரம்

பாதிப்புற்றவரைக் கீழே இருத்தி தலையைச் சற்று முன்னால் சாய்த்து வைக்கவும். இது சுவாசப்பாதை திறந்திருப்பதை உறுதிசெய்வதுடன் குருதி தொண்டைக்குள் சென்று வயிற்றை அடைந்து அதனால் பாதிப்புற்றவர் வாந்தி எடுப்பதையும் தடைசெய்யும்.

பாதிப்புற்றவரிடம் வாய் வழியாக சுவாசிக்குமாறு கூறுவதுடன் மூக்கின் மென்மையான பகுதியை பத்து நிமிடங்களுக்கு நசுக்கிப் பிடிக்குமாறும் கூறவும்.

துப்பவோ, கதைக்கவோ, முகரவோ வேண்டாம் எனக் கூறவும். ஏனெனில் இரத்தம் உறைவதை இவை தடுக்கக்கூடும். கொட்டும் இரத்தத் துளிகளை துடைப்பதற்கு கடதாசி டிஸ்யூ வழங்கவும்.

பத்து நிமிடங்களின்பின் பிடியை மெல்லத் தளர்த்துமாறு கூறவும். தொடர்ந்தும் குருதி வடிந்தால் மேலும் பத்து நிமிடங்களுக்கு மூக்கை நசுக்கிப்பிடிக்குமாறு கூறவும்.

குருதிப் பெருக்கு முப்பது நிமிடங்களுக்குமேல் நீடித்தால் கட்டாயமாக பாதிப்புற்றவரை ஒரு மருத்துவர் பார்க்க வேண்டும். சிகிச்சை நிலையில் வைத்தவாறே அவரை மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.

குருதிக் கசிசு நின்றதும் பாதிப்புற்றவர் முன்னால் குனிந்தபடியே இருக்க மூக்கைக் சுற்றியுள்ள பகுதியை இளஞ்சூட்டு நீரால் மெதுவாக துப்பரவு செய்துவிட்டு வாயைக் கழுவச் சொல்லவும்.
குருதி உறைவதைக் கெடுத்துவிடாதபடி ஒருசில மணி நேரங்களுக்கு ஓய்வெடுக்குமாறும் மூக்கைச் சிந்துவதை அல்லது உறைந்த கட்டியான குருதியை உடைத்துவிடுவதனை தவிர்க்குமாறும் பாதிப்புற்றவரிடம் கூறவும்.

கன்றிப்போதல்

பின்னணித் தகவல்

கன்றிப்போதல் முன்னர் கூறியதுபோல் ஒருவகையான உட்புற குருதிக் கசிவாகும். கன்றிப்போதுல் அநேகமாக எப்போதுமே நேரடித் தாக்கத்தினால் அல்லது காயத்தினால் ஏற்படுகின்றது. இது படிப்படியாகவே ஏற்படுகின்றது. இதற்கு முதலுதவி அவசியமில்லை. முதலுதவி பற்றி அறிந்திருக்கும் நீங்கள் கையாள வேண்டிய வகையைச் சோ்ந்த கன்றிப்பு உடனடியாகவும் வீக்கத்துடனும் சேர்ந்து தோன்றுவதாகும். இந்த வகையான கன்றிப்பு ஆழமான காயத்திற்கான அறிகுறியாகும்.

குறிக்கோள்

காயமுற்ற பகுதிக்கு குருதியைக் குறைத்தல்
வீக்கத்தையும் கன்றிப்போதலையும் நோவையும் குறைத்தல்

பரிகாரம்

எப்போதும்போல் ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்யவும்.

அவசியமானால் பாதிப்புற்றவரைக்கீழே இருத்தி காயமுற்ற பாகத்தை உயர்த்தி சௌகரியமான ஒரு நிலையில் வைக்கவும். முறிவு அல்லது வேறு காயங்கள் இருக்கக்கூடும் என நீங்கள் கருதினால் மருத்துவ ஆலோசனை பெறவும்.

குளிர்மையான பொட்டனி ஒன்றை வைத்து பத்து நிமிடங்கள் அமத்திப்பிடிக்கவும். அவசியமானால் பொட்டனியை வைத்து கட்டிவிடவும். கிறேப்பெண்டேஜ் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டாம். இவற்றால் காயத்திற்கு அப்பாற்பட்ட பகுதிக்கு குருதிச் சுற்றோட்டம் தடைப்படக்கூடும். பொட்டனிக்கு பதிலாக ஐஸ் கட்டியை அல்லது உறையவைத்த உணவைப் பயன்படுத்துவதாயிருந்தால் அவற்றை சருமத்தில் வைக்குமுன் அவை ஒரு துவாயினால் அல்லது அதனையொத்த புடவையால் சுற்றப்பட்டிருக்க வேண்டும். ஐஸ் கட்டி அவ்வாறு சுற்றப்படாவிட்டால் சருமம் எரிவுக்குள்ளாகும். ஐஸ் பொட்டனி ஒரு நேரத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படக்கூடாது.

பாதிப்புற்றவரை மருத்துவமனைக்கு அனுப்புவதாயின் நீங்கள் கண்டறிந்த விடயங்களையும் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அறிவிக்கவும்