நீண்ட தவணைப் பராமரிப்பு
நீண்ட தவணைப் பராமரிப்பு
நீங்கள் இருக்கும் இடத்தின் காரணமாக சிலவேளை பாதிப்புற்றவரை மருத்தவ உதவிக்கு கொண்டு செல்வதற்கு அல்லது போக்குவரத்துக்கு காத்திருக்கும்போது அவருடன் நீண்ட நேரம் தங்கியிருந்து அவரைப் பராமரிக்க வேண்டியிருக்கலாம். ஆதலால் நீங்கள் கருத்திற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை கீழே தருகின்றோம்.
அவதானித்தலும் பதிவு செய்தலும்
பாதிப்புற்றவரை அடிக்கடி அவதானித்து நீங்கள் அவதானித்தவைளைப் பற்றிய குறிப்புகளை பத்து நிமிடங்களுக்கு ஒரு தடைவ எழுதி வைப்பது முக்கியம். இந்த அவதானிப்புகளின் பெறுபேறுகள் பாதிப்புற்றவர் தேறுகின்றாரா அல்லது அவரின் நிலைமை மோசமடைகின்றதா என்பதை தீர்மானிப்பதற்கும் அவருக்கு தேவைப்படக்கூடிய மேலும் பரிகாரங்களைப் பற்றி சிந்திப்பதற்கும் உதவும். அவர் தேறுகின்றார் என இந்த அவதானிப்புகளிலிருந்து அறிந்து கொண்டதும் இந்த சோதனைகளை நீங்கள் நீண்ட இடைவேளைக்கு ஒரு தடைவ ( முப்பது நிமிடங்கள் வரை) மேற்கொள்ளலாம். அவர் மேலும் நன்றாக தேறினால் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு தடவை இச்சோதனைகளை மேற்கொள்ளலாம்.
சுயநினைவின் மட்டங்கள் ( எதிர்ச் செயற்பாடு)
அவர் கண்ணைத் திறப்பதன்மூலம் அல்லது மூடுவதன்மூலம்
அவர் கதைப்பதன் மூலம்
அவர் அவயங்களையும் உடலையும் அசைப்பதன் மூலம்
நாடித் துடிப்பு
அளவை அல்லது வேகத்தை தீர்மானிப்பதற்கு நாடித் துடிப்ப மணிக்கட்டில் அல்லது கழுத்தில் முழுமையாக ஒரு நிமிடத்திற்கு எடுக்கப்படுதல் வேண்டும்
பலமும் தாளமும் ஒரே நேரத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
சுவாசம்
அளவைத் தீர்மானிப்பதற்கு சுவாசம் முழுமையாக ஒரு நிமிடத்திற்கு எண்ணப்படுதல் வேண்டும். சுவாசத்தை நீங்கள் எண்ணுவதாக பாதிப்புற்றவருக்கு கூறாதிருப்பது நன்று. அது அவருக்கு தெரிந்தால் சுவாசம் பாதிக்கப்படக்கூடும்.
கண்மணிகள்
வழமையானவை
சமமற்றவை
விரிந்திருத்தல்
சுருங்கியிருத்தல்
சருமம்
குளிர்ந்து, ஈரமாக வியர்தல் இருத்தல்
குளிர்ந்தும் உலர்ந்தும் இருத்தல்
சூடாகவும் உலர்ந்தும் இருத்தல்
சூடாகவும் வியர்த்தும் இருத்தல்
வெளிறியிருத்தல்
சிவந்திருத்தல்
வெப்பநிலை
உடல் வெப்பநிலையை வெப்பமானியினால் எடுக்கப்படுவதே நன்று அப்படி எதுவும் கிடைக்காவிட்டால் உங்கள் கையின் பின்புறத்தை பாதிப்புற்றவரின் நெற்றியில் வைத்து மற்ற கையை உங்கள் நெற்றியின்மீதும் வைக்கவும். அப்பொழுது வித்தியாசத்தை ( குளிரா சூடா என) உங்களால் உணர முடியும். ஒரு சில நிலைமைகளிலும் நோய்களிலும் வெப்ப நிலை நேரத்துக்கு நேரம் மாறக்கூடும். ( உதாரணமாக மலேரியா, குளிர் காய்ச்சல், காய்ச்சல், வியர்த்தல்) மருத்துவரின் தகவலுக்காக குறிப்பெழுதும்போது பின்வருவனவற்றின் செம்மையான பதிவை வைத்திருத்தல் வேண்டும்.
எடுக்கப்பட்ட நேரம்
வெப்பநிலை
சருமத்தின் தோற்றம்
மேலதிகப் பராமரிப்பு
பாதிப்புற்றவரின் தற்போதைய நிலைமையைத் தீர்மானித்ததும் வழமையாக முதலுதவியாகக் கருதப்படாத வேறு பரிகாரம் அவருக்கு தேவைப்படலாம். தேவைப்படக்கூடிய ஒரு சில பரிகாரங்களும் செயற்பாடுகளும் கீழே குறிப்பிடப்படுகின்றன.
திரவியங்கள்
முதலுதவிச் சுற்றாடலில் திரவியங்கள் கொடுக்கப்படக் கூடாதென்பது பொது நடைமுறையாகும். ஆனால் நீடித்த பராமரிப்பில் அவை தேவைப்படலாம். நரம்பின் ஊடாக திரவங்களைப் பாய்ச்சுவதற்கு முதலுதவி பற்றி அறிந்திருக்கும் மருத்துவ அல்லது துணை மருத்துவ ஆளணியினர் இல்லாவிடில் வாயின் ஊடாக திரவியங்களை கொடுக்க நேரிடலாம். உட்புறக் காயங்கள் உள்ள அல்லது பாதிப்புற்றவரை வாந்தியெடுக்கச் செய்கின்ற நோயாளிகளுக்கு திரவங்கள் கொடுக்கப்படுதலாகாது. துரதிஷ்டவசமாக முதலுதவி வழங்குபவரால் இவற்றை எப்போதுமே இனங்கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால் வழமையான முதலுதவியில் திரவத்தை கொடுக்காதிருப்பது வழமையாக இருந்தபோதிலும் சிறிதளவு திரவத்தைக் கொடுப்பதைவிட நீண்ட நேரம் நீர் வற்றிய நிலையில் இருப்பது ஆபத்தானது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். வழிகாட்டியயொன்றாக பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் சுகவீனமாக இருந்தால், வாந்தி எடுத்தால் அல்லது அவருக்கு அடிவயிற்றுக் காயங்கள் எவையும் இருந்தால் திரவங்களைக் கொடுக்க வேண்டாம்.
பானம் அவர்களை வாந்தியெடுக்க செய்யுமாதலால் முதலில் சிறிதளவு மாத்திரம் கொடுக்கவும்
ஒரே முறையில் அதிகமாகக் கொடுப்பதைவிட சிறிய அளவுகளில் கொடுப்பது நன்று
குறுகிய நேரத்திற்கு தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் பழச்சாறு, அல்லது சூப்போன்ற சத்துள்ள திரவங்களை கொடுப்பது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.
மதுசாரம் கொடுக்க வேண்டாம்
தேநீர், கோப்பி என்பன பாதிப்புற்றவரை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் ஆதலால் நீர்வற்றிய நிலை மேலும் மோசமடையலாம்.
எவ்வளவு நீர் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய பதிவொன்றை நீங்கள் வைத்திருத்தல் வேண்டும். நாளொன்றுக்கு 5-6 லீற்றர் நீரை நீங்கள் கொடுக்க தெண்டிக்கலாம்.
உணவு
திரவங்களை உட்கொள்வதற்கு எதிரான விதிகள் உணவை உட்கொள்ளுதல் தொடர்பிலும் ஏற்புடையதாகும். அதிர்ச்சிக்குட்பட்ட நோயாளிக்கு எப்படியும் பசி இருக்கமாட்டாது. எனினும் நான்கு மணித்தியாலயங்களுக்குள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவிருப்பின் ( உதாரணமாக சத்திர சிகிச்சை) அவருக்கு உணவு ஊட்டப்படுதலாகாது என்பதை நீங்கள் மனதில் கொள்ளுதல் வேண்டும் மீட்புப் பணி 8 மணித்தியாலயங்களுக்கு அல்லது அதற்கு மேல் தாமதப்படுமாயின் சோறு அல்லது உருளைக் கிழங்கு என்பவற்றை கொடுப்பது பற்றி சிந்திக்கலாம். பாதிப்புற்றவருக்கு உணவு ஊட்டப்படலாமா கூடாதா என்பதனைக் தீர்மானிக்கையில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள், காலநிலை என்பவற்றையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.


